கள்ள நோட்டு தயாரித்த கும்பல் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் கடைவீதியில் இருக்கும் ஒரு பெட்டி கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டு ஒரு நபர் 500 ரூபாய் கொடுத்துள்ளார். அதை வாங்கிய கடைக்காரர் அது கள்ள நோட்டு என்பது அறிந்து கொண்டு அந்த நபரிடம் கேட்டதற்கு முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் ஏற்பட்ட கடைக்காரர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
இதனை அடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் அந்தோணியார் கோவில் தெருவில் வசிக்கும் குணா என்பதும், வேலூரில் வசிக்கும் தர்மராஜ் என்பருவடைய வீட்டை வாடகை எடுத்து அவரையும் ஒரு பங்குதாரராக சேர்த்துக் கொண்டு கள்ள நோட்டு தயாரித்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த வீட்டை சுற்றி வளைத்து அங்கிருந்த தர்மராஜை கைது செய்து கள்ள நோட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட ஸ்கேனர் உள்ளிட்ட கருவிகளையும், காகிதங்கள் மற்றும் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.
பின்னர் கள்ள நோட்டை சமயபுரம் உள்பட பல பகுதிகளில் புழக்கத்தில் விட்ட மதன் குமார், அருண்குமார் மற்றும் அருண்குமார் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இவர்கள் எத்தனை வருடம் கள்ள நோட்டு தயாரித்து வருகிறார்கள், எந்தெந்த பகுதிகளில் அதை புழக்கத்தில் விட்டார்கள், இவற்றில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டுள்ளார்களா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.