கள்ளத்தொடர்பை பெண்ணின் கணவரிடம் கூறிய காரணத்தினால் நண்பரை இறைச்சிக் கடைக்காரர் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள கெங்குவார்பட்டியில் முகமது ஹமீம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த மாதம் 27-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்று விட்டு நெடுநேரமாகியும் திரும்பி வராத காரணத்தினால் அவரின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஹமீமை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கெங்குவார்பட்டி பகுதியில் இருக்கும் கிணற்றில் அவர் சடலமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் விரைந்து சென்று காவல்துறையினர் முகமது ஹமீம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அந்தப் பரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டு கிணற்றுக்குள் வீசப்பட்டு இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து முகமது ஹமீம் கொலை தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்ததில் அவரின் இருசக்கர வாகனத்தை பயன்படுத்திய ஒருவரை காவல்துறையினர் பிடித்துள்ளனர். அப்போது அவர் தான் வைத்திருக்கும் இருசக்கர வாகனத்தை இறைச்சிக் கடை நடத்தி வருகின்ற ரபீக் ராஜா என்பவரிடமிருந்து வாங்கினேன் என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ரபிக் ராஜாவை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்த போது அவர் தனது இறைச்சிக்கடையில் வெல்டிங் தொழிலாளி மனைவி ஒருவர் அடிக்கடி வந்து சென்றதில் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதுபற்றி எனது நண்பரான முகமது ஹமீமிடம் தெரிவித்தேன். இதனால் முகமது ஹமீம்க்கு அந்தப் பெண்ணின் மீது ஆசை ஏற்பட்டுள்ளது. பின்னர் தனக்கு கிடைக்காத பெண் தனது நண்பருக்கும் கிடைக்க கூடாது என்ற பொறாமையில் பெண்ணின் கணவரிடம் ரபீக் ராஜாவின் கள்ளத்தொடர்பு பற்றி தெரிவித்துள்ளார்.
இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. பிறகு ரபீக் ராஜாவிடம் தங்கள் இரண்டு பேரையும் முகமது ஹமீம் தனது கணவரிடம் காட்டிக் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த ரபீக் ராஜா நண்பரான முகமது ஹமீமை கொலை செய்வதற்கு முடிவு செய்துள்ளார். இதையடுத்து முகமது அசீம் ரகுராம் என்பவர் முகமது ஹமீமை தோட்டத்திற்கு அழைத்து சென்று ரபிக் ராஜாவுடன் சேர்ந்து கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளனர்.
இதில் முகமது ஹமீம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதன்பின் அவர்கள் இருவரும் அவரின் சடலத்தை கிணற்றுக்குள் வீசி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களுக்கு துணை போன பாண்டீஸ்வரன் உள்பட 5 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.