கள்ளக்காதல் பிரச்சனையில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குமரி மாவட்டத்தில் உள்ள ராமனாதிச்சன்புதூர் பகுதியில் அஜய் ஜான்சன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஷாலினி என்ற மனைவியும், ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் ஷாலினி மீண்டும் கர்ப்பம் அடைந்ததால் வெளிநாட்டில் வேலை பார்த்து கொண்டிருந்த ஜான்சன் 4 வருடங்களுக்கு முன்பாக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அதன்பின் வெளிநாட்டிற்கு செல்லாமல் இங்கே தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். பின்னர் இவரின் நண்பரான பிரபாகரனுக்கு திருமணமான பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இது பற்றி பிரபாகரன் தனது நண்பர்களான லியோன் மற்றும் அஜய் ஜான்சனிடம் கூறியிருக்கிறார்.
இதில் நண்பனின் கள்ளக்காதலி மீது லியோன் மற்றும் அஜய் ஜான்சனுக்கு ஆசை ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்தப் பெண்ணை இருவரும் தனிமையில் சந்தித்து தொலைபேசி எண்ணை கேட்டு அடிக்கடி தொல்லை செய்வதாக அவர் பிரபாகரனிடம் தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த பிரபாகரன் தனது நண்பர்களை நேரில் சந்தித்து, எனது கள்ளக்காதலியிடம் எவ்வாறு தொலைபேசி எண்ணை கேட்கலாம் என அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விட்டு அங்கிருந்து சென்றுள்ளார். அதற்குப் பிறகு லியோன் மற்றும் அஜய் ஜான்சன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருக்கும் போது பிரபாகரன் இரண்டு நபர்களுடன் வழிமறித்து தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அஜய் ஜான்சனை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அஜய் ஜான்சனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரபாகரன் உள்பட 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் அமுல் மற்றும் கண்ணன் ஆகிய இரண்டு பேரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.