மனைவியை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புதுபூங்குளம் கிராமத்தில் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அனைத்து வாகனங்களின் ஓட்டுநர்களுக்கும் பயிற்சி அளிக்கும் நிலையம் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி திவ்யா என்ற மனைவியும், வர்ஷினி ஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் தாய் வீட்டில் இருந்த மனைவியை அழைத்து வந்து கொலை செய்துவிட்டு கணவன் தலைமறைவாகியதால் அவரை பிடிப்பதற்கு மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் பேரில் சத்தியமூர்த்தியை பிடிப்பதற்கு 5 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் வலைவீசி தேடிவந்தனர்.
அப்போது நர்சிங் கல்லூரியில் படித்து வந்த அர்ச்சனா என்பவருடன் தப்பிச் சென்று பொள்ளாச்சி, சென்னை, ஊட்டி, கோயம்புத்தூர், என பல பகுதிகளில் சுற்றித்திருந்த நிலையில் அவர்கள் தஞ்சாவூரில் இருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து தனிப்படை காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று சத்தியமூர்த்தியை கைது செய்து, பின் அவருடன் இருந்த கள்ளக்காதலி அர்ச்சனா மற்றும் குழந்தை ஆகிய 2 பேரையும் கந்தலிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சத்தியமூர்த்தி கூறியதாவது, ஓட்டுநர் பயிற்சி அளிக்கும் நிலையம் நடத்தி வந்த போது திவ்யாவுடன் பழக்கம் ஏற்பட்டதால் அவரை காதல் திருமணம் செய்து எங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. அதற்குப் பிறகு திவ்யாவின் அண்ணன் மகளான அர்ச்சனா என்பவருக்கும் வாகனம் ஓட்ட கற்றுக்கொடுத்த நிலை அவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் திவ்யாவிற்கு எனக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பின் திவ்யா என்னிடம் கோபித்து கொண்டு தாய் வீட்டில் இருந்தார். அப்போது அர்ச்சனாவை திருமணம் செய்து கொள்வதற்கு திவ்யா சம்மதம் அளிக்க மாட்டார் என முடிவு செய்து அவரை அழைத்து வந்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்தேன் என காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சத்தியமூர்த்தி தனது உடலில் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட காரணத்தினால் மன உளைச்சலில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாக கூறி விட்டு எங்களை யாரும் தேட வேண்டாம் என மொபைல் போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு நாடகமாடியது காவல்துறையினர் தெரியவந்துள்ளது.