திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள செம்பரம்பாக்கம் என்ற கிராமத்தில் செல்வம் என்ற காமராஜ் மற்றும் துர்கா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களின் மூத்த மகன் தனசேகர் என்ற சூர்யாவை அவருடைய தாத்தா கோவிந்தசாமி வளர்த்து வந்தார் . 9ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் சூர்யாவை கடந்த 9ம் தேதி முதல் காணவில்லை என்று அவரின் தாத்தா பல அனைத்து இடங்களில் தேடியுள்ளார் . ஆனால் சூர்யா கிடைக்காததால் சோழவரம் காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.
அதன்பிறகு மாயமான சூர்யா நத்தம் கிராமத்தில் உள்ள கோவில் குளத்தில் பிணமாக மீட்கப்பட்டார். இதை அடுத்து சம்பவம் பற்றி போலீசார் நடத்திய விசாரணையில், சூர்யாவை கடைசியாக நத்தம் கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றதாக சிலர் கூறியுள்ளனர் . அதன்பிறகு கோபாலகிருஷ்ணனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர் .
அப்போது விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. துர்கா தனது கணவர் காமராஜருடன் சண்டைபோட்டு நத்தம் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது துர்கா பக்கத்து வீட்டில் இருக்கும் கோபாலகிருஷ்னுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. அவர் கள்ளக்காதலன் உடன் உல்லாசமாக இருந்தபோது அவருடைய மூத்த மகன் சூரியா நேரில் பார்த்து விட்டான்.
அதனால் சூர்யா தனது தந்தையிடம் இது பற்றிக் கூறி விடுவான் என்று அச்சமடைந்த கோபாலகிருஷ்ணன், கடந்த 9ஆம் தேதி சூர்யாவை அவரது மோட்டார்சைக்கிளில் அழைத்து சென்று அடித்து கொலை செய்துள்ளார். சூர்யாவின் உடலை அங்குள்ள கோவில் குளத்தில் வீசியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.இதையடுத்து போலீசார் கள்ளக்காதலன் கோபாலகிருஷ்ணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொலையில் சம்பந்தப்பட்ட துர்காவை பிடித்து சென்ற போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .