கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்ற மரம் மீது மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சவுந்தர்ராஜன்(45)- பிரியா(43). இத்தம்பதியருக்கு அபிஷேக்(16) என்ற மகனும் எஸ்வந்தினி(18) என்ற மகளும் உள்ளனர்.எஸ்வந்தினி தற்போது நடைபெற்ற நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்நிலையில் அவரை நாமக்கல்லில் உள்ள பல் மருத்துவக் கல்லூரியில் சேர்ப்பதற்காக குடுபத்தினர் அனைவரும் நாமக்கல் நோக்கி காரில் சென்றுள்ளனர்.
அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் அருகே விருத்தாசலம்-சேலம் சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் உள்ள புளிய மரத்தின் மீது பலமாக மோதியது. இந்த கோர விபத்தில் சவுந்தர்ராஜன், பிரியா,அபிஷேக் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த எஸ்வந்தினி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.