கள்ளக்குறிச்சி கனியாமூரில் இருக்கக்கூடிய தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் தாய் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தெரிவித்திருக்கிறது.
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான விசாரணை குறித்து அவரது தந்தை ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு ஏற்கனவே சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவதால் இந்த வழக்கை ஏன் முடித்து வைக்க கூடாது என்று நீதிபதி மனுதாரர் தரப்பில் கேள்வி எழுப்பினார்.
அப்போது மனுதாரர் தரப்பில் உயர்நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை கண்காணித்து வருகிறது. காவல் நிலைய விசாரணை மட்டுமல்லாமல், சிபிசிஐடி விசாரணை, சிறப்பு புலனாய்வு குழு விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. அதையும் நீதிமன்றம் கண்காணித்து வருகிறது. குறிப்பாக பிரேத பரிசோதனை தொடர்பாக அறிக்கைகள் இதுவரை தங்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே அதை வழங்கும் வரை இந்த வழக்கை முடித்து வைக்க கூடாது என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்பொழுது சிபிசிஐடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பை மாணவியின் பெற்றோர்களான தாய், தந்தை இருவரும் தர வழங்கவில்லை. டிஎன்ஏ பரிசோதனைக்கு மாதிரிகளை வழங்க மறுக்கிறார்கள். மாணவி பயன்படுத்திய செல்போனை வழங்க மறுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்.
இதை அடுத்து வழக்கு விசாரணையை அக்டோபர் பத்தாம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, மாணவி செல்போனை பயன்படுத்தி இருந்தால் அதை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க வேண்டும் என பெற்றோருக்கு உத்தரவிட்டிருக்கிறார். அதே சமயம் விசாரணையின் அடுத்த கட்ட முன்னேற்றம் குறித்து அறிக்கை தாக்கல் செய்வதற்கு சிபிசிஐடிக்கு உத்தரவிட்டு இருக்கிறார்.