தமிழ் சினிமாவில் பிரபலமான பாடல் ஆசிரியராக இருப்பவர் கவிஞர் வைரமுத்து. இவர் கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூலுக்கு கடந்த 2003-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. அதன் பிறகு 22 மொழிகளில் சாகித்ய அகாதமி நிறுவனம் கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற நூலை மொழிபெயர்த்துள்ளது. அந்த வகையில் தற்போது ஆங்கில மொழியிலும் கள்ளிக்காட்டு இதிகாசம் நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த நூல் ஆங்கிலத்தில் தி சாகா ஆஃப் தி சாக்டஸ் லேண்ட் என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த நூல் துபாயில் ரைஸ் அமைப்பின் சர்வதேச மாநாட்டின் போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விழா அட்லாண்டிஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் 32 நாட்டின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு நூலின் பிரதியை பெற்றுக் கொண்டனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து முதன்முதலாக மண்ணின் மைந்தனுக்காக எழுதப்பட்ட ஒரு நூல் இத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் தமிழ் பாடலாசிரியர் ஒருவர் எழுதிய நூல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு அதை 32 நாட்டைச் சேர்ந்த பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனது சிறப்பான ஒன்றாக பார்க்கப்படும் நிலையில் கவிஞர் வைரமுத்துக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.