கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மன்னார்புரம் இந்திராநகர் பகுதியில் வள்ளிமயில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சஞ்சய் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தெற்கு விஜயநாராயணம் பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சஞ்சய் நீண்ட நேரம் செல்போனில் கேம் விளையாடி உள்ளார். இதனை அவரது தாயாரான வள்ளிமயில் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சஞ்சய் திடீரென வீட்டின் மாடியில் உள்ள அறையில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனடியாக திசையன்விளை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சஞ்சயின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.