பப்ஜி விளையாட்டால் கல்லூரி மாணவரின் கையை அரிவாளால் வெட்டிய முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஒரே நேரத்தில் உலகின் வெவ்வேறு இடங்களில் இருந்து கொண்டே இயர்போன் வழியாக ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு ஆன்லைனில் வெடிகுண்டுகள், துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் தங்களை வீரர்களாக உருவகப்படுத்திக் கொண்டு தங்கள் எதிரிகளை அழிக்க தனியாகவும், நண்பர்களுடனும் போராடும் வன்முறைகள் நிறைந்த விளையாட்டு தான் பப்ஜி. இந்த விளையாட்டுக்கு சிறுவர்கள் தொடர்ந்து அடிமையாகி வருகின்றனர். இந்நிலையில் விளையாடுபவர்கள் கொள்ளு, சுட்டுத்தள்ளு என்ற வார்த்தைகளை உச்சரித்து கொண்டு விளையாடி வருவதாக பல பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விளையாட்டில் தோல்வி அடைந்துவிட்டால் சிறுவர்கள் செல்போனை அல்லது வீட்டில் உள்ள பொருட்களை உடைப்பது, தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்வது முதல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாறைகோட்டை பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் தாராபுரத்தில் உள்ள அரசு ஐ.டி.ஐ.,யில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் அடிக்கடி வீட்டிற்கு அருகிலுள்ள துணி துவைக்கும் கல்லில் அமர்ந்து கொண்டு விளையாடி வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் வழக்கம்போல் அவரது நண்பர்களுடன் அமர்ந்து பப்ஜி விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது பக்கத்து வீட்டு பகுதியில் வசிக்கும் ராமசாமி என்பவர் தூங்குவதற்கு இடையூராக இருப்பதாக கூறி சத்தம் போட்டுள்ளார். இதனால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராமசாமி வீட்டுக்குள் சென்று அரிவாளை எடுத்து வந்து கார்த்திக் கையில் வெட்டினார். இதில் காயமடைந்த கார்த்திக் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கார்த்திக் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வீரபாண்டி காவல்துறையினர் ராமசாமியை கைது செய்துள்ளனர். மேலும் ராமசாமி ஒரு கொலை வழக்கு தொடர்பாக தண்டனை அனுபவித்து கடந்த 3 வருடங்களுக்கு முன் சிறையிலிருந்து விடுதலையாகி வந்தது குறிப்பிடத்தக்கது.