கால்நடை தீவன பயிர்கள் வளர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கால்நடை தீவன உற்பத்தி கடந்த காலங்களை விட 50 சதவீதம் குறைந்து விட்டதனால் பெருமளவில் பாதிப்பு உண்டாக வாய்ப்பு இருக்கின்றது. இதனை தவிர்ப்பதற்காக மாவட்டத்தில் கால்நடை தீவன அபிவிருத்தி திட்டம் கடந்த ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டது. அதன்படி 2021- 2022 ஆம் ஆண்டிலும் இந்த தீவன உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை கால்நடை பராமரிப்பு துறை மேற்கொண்டது. இந்த மாவட்டத்தில் உள்ள குரும்பேரி பகுதியில் 17.5 ஏக்கர் மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள் இருப்பது தெரியவந்தது.
இங்கு வேளாண்மைதுறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மை பொறியியல் துறை, வனத்துறை போன்ற துறைகளின் மூலம் நிலத்தை சமன் செய்து நிலங்களில் தீவன சோளம், கம்பு மக்காச்சோளம், கம்பு நேப்பயிர், ஒட்டுப்புல், கினியாப் புல், கொழுக்கட்டை புல், குதிரை மசால், வேலி மசால், முயல் மசால், சவுண்டல் போன்ற கால்நடை தீவனப் பயிர்களை பயிரிட்டு 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கால்நடைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் நாசர் தெரிவித்துள்ளார். இவ்வாறு இந்த பகுதியில் விளைந்து வரும் தீவனங்கள் கால்நடை வைத்திருப்பவர்களுக்கு இலவசமாக கொடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனால் கால்நடை தீவன உற்பத்தியும், கால்நடைகளும் அதிகமாகும் என்றும் அவர் கூறியுள்ளார் .