தாளவாடி மலைப்பகுதியில் விவசாய தோட்டத்திற்குள் சுற்றி திரியும் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்து சூசையாபுரம் கிராம பகுதியில் கடந்த சில நாட்களாக விவசாய பகுதியில் சிறுத்தை ஒன்று சுற்றி திரிவதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு புகார் கொடுத்தனர். இந்த நிலையில் சுப்பிரமணி என்பவர் தோட்டத்தில் இரண்டு ஆட்டுக்குட்டிகளை சிறுத்தை ஒன்று கடித்து கொன்றது. இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தாளவாடி வனத்துறையினர் கால் தடங்களை வைத்து சிறுத்தை என்பதை உறுதி செய்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இப்பகுதியில் வனத்துறையின் கூண்டில் சிறுத்தை ஒன்று அகப்பட்டது. இந்த நிலையில் தற்பொழுது மீண்டும் இப்பகுதியில் சிறுத்தையின் நடமாட்டத்தால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வனத்துறையினரிடம் அவர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.