Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஒரு தலைக் காதல் விவகாரம்”… கல்லூரி மாணவியின் தந்தையை குத்தி கொலை செய்து விட்டு… தற்கொலைக்கு முயன்ற கொலையாளி….!!

ஒரு தலைக் காதலால் கல்லூரி மாணவியின் தந்தையை கொலை செய்து விட்டு இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் உள்ள குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சார்லஸ் ஜான்- செலின் ரோஸி. சார்லஸ் ஜான்  அப்பகுதியில் உள்ள தென்னை நார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி செலின் ரோஸி அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இத்தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் திருமணமாகி பெங்களூரில் வசித்து வருகிறார். இளைய மகள் மார்த்தாண்டத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி எம்.ஏ படித்து வருகிறார்.

இந்நிலையில் கல்லூரி மாணவியான இளைய மகளை குமாரபாளையத்தை  சேர்ந்த கார்த்திக்(25) என்ற இளைஞர் ஒரு தலையாக காதலித்துள்ளார். மாணவியிடம் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு கார்த்திக்  தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.மேலும் சார்லஸ் ஜானை சந்தித்து உங்களுடைய மகளை எனக்கு திருமணம் செய்து கொடுங்கள் என்று கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர்  மறுத்ததோடு வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து தனது மகளுக்கு நிச்சயம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக் சார்லஸ் தான் மீது மிகுந்த ஆத்திரத்துடன் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை சார்லஸ் ஜானும்,செலின் ரோஸியும் வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று உள்ளனர். மதியம் சார்லஸ் ஜான் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கார்த்திக்கும் அவருடைய வீட்டிற்கு வந்து அவருடைய மகளை திருமணம் செய்து வைக்கும்படி மீண்டும் வற்புறுத்தி உள்ளார். அப்போது சார்லஸ் ஜான் கார்த்திக்கை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் அங்கு இருந்த கத்திரிக்கோலை எடுத்து சார்லஸ் ஜானை சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில் முதுகு மற்றும் கழுத்துப் பகுதியில் அவருக்கு பலமாக காயம் ஏற்பட்டதால் சார்லஸ் ஜான் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்ற கார்த்திக் காவல்துறையினருக்கு பயந்து விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மேலும் தான் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது பற்றி தனது நண்பர்களுக்கு தெரிவித்துள்ளார். அவருடைய நண்பர்கள் கார்த்திகை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதற்கிடையே மதிய சாப்பாட்டிற்கு  சென்ற சார்லஸ் ஜான் நீண்ட நேரமாகியும் நிறுவனத்திற்கு திரும்பி வராததால் அவரை தேடி நிறுவன  ஊழியர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு சார்லஸ் ஜான் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சார்லஸ் ஜான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேலைக்கு சென்ற சார்லசின் மனைவி தனது கணவர் இறந்தது அறிந்ததும் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். மேலும் கொலையாளி கார்த்திக் கைது செய்யப்பட்டு அவருக்கு காவல்துறையினரின் பாதுகாப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |