பிப்ரவரி 1 2003 இல் கல்பனா சாவ்லா விண்ணில் வீரமரணம் அடைந்த நாள். இளமை முதலே உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்து அதை நோக்கி பயணம் செய்பவர்கள் நிச்சயம் வெற்றி அடைகிறார்கள் என்பதற்குக் கல்பனா சாவ்லா மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. அரியானாவில் பிறந்து விண்ணில் பறக்க விருப்பம் கொண்டு அமெரிக்கா சென்று விண்வெளி பொறியியலில் முதுகலை பட்டம் பெற்றவர். அத்தோடு நின்றுவிடாது முனைவர் பட்டம் வரை முன்னேறியவர் கல்பனா சாவ்லா. 1995ஆம் ஆண்டு நாசாவின் விண்வெளி வீரர் பயிற்சி குழுவில் இணைந்த சாவ்லாவுக்கு 1997ஆம் ஆண்டு விண்ணில் பறக்கும் வாய்ப்பு கிடைத்தது.
விண்ணில் பறந்த முதல் இந்தியப் பெண் என்ற பெருமையுடன் வெற்றிகரமாக அந்த பயணத்தை முடித்த அவருக்கு 2003ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் நாள் மீண்டும் கொலம்பியா விண்களத்தில் ஆறு பேருடன் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. வெற்றிகரமாக பயனுள்ள பல ஆய்வுகளை முடித்துகொண்டு திரும்பிய பிப்ரவரி முதல் நாளன்று தரையிறங்க 15 நிமிடங்கள் இருக்கும் நிலையில் நல்லாஸ் நகரில் வெடித்து சிதறியது அந்த விண்கலம். கல்பனா சாவ்லா உட்பட விண்வெளி வீரர்கள் அனைவரும் உயிரிழந்தனர். சாதனை பெண்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய கல்பனா சாவ்லா விண்ணில் கரைந்து வீர மரணம் அடைந்த நாள் வரலாற்றில் இன்று.