முயற்சியும் தியாகமும் இணைந்தால் வெற்றி வெகுதூரமில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர் கற்பனா. தொட்டுவிடும் தூரத்தில்தான் விண்வெளி அதை எட்டி விடும் நோக்கத்திற்கே என் வாழ்வு என்பதை மெய்ப்பித்தது அவரது தியாகம். மறைந்தாலும் துருவ நட்சத்திரமாய் ஜொலிக்க கல்பனா சாவ்லாவின் நினைவைப் பறைசாற்றும் சில அர்ப்பணிப்புகளை காண்போம். ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து உலகமே வியக்கும் அளவில் விண்வெளித் துறையில் சாதனை படைத்த கல்பனா சாவ்லாவின் மறைவு இந்தியாவிற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது.
இந்தியாவின் புகழை உலகம் முழுவதும் கொண்டு சென்றவர்களில் கல்பனா சாவ்லாவும் ஒருவர். அவரது தியாகத்தைப் போற்றும் வகையில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் வீர தீர சாகசச் செயல் புரியும் இளம் பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி 2௦11 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க கர்நாடக அரசு கல்பனா சாவ்லா விருதினை 2004ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது.
நியூயார்க்கில் உள்ள ஒரு தெருவிற்கு கல்பனா வே என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் நாசா ஆய்வகம் கல்பனா சாவ்லாவின் நினைவைப் பறைசாற்றும் விதமாக ஒரு அதிநவீன கணினியை அர்ப்பணித்துள்ளது. ஆர்லின் டன்னில் இருக்கும் டெக்சாஸ் பல்கலைக்கழகம் கல்பனா சாவ்லா ஹால் என்ற விடுதியை 2004ஆம் ஆண்டு துவக்கியது. இதே பல்கலைக்கழகத்தில் தான் கல்பனா தனது முதல் முதுகலை பட்டத்தை பெற்றார். செவ்வாய் கிரகத்தில் நாசா மார்ஸ் எக்ஸ்போரேசன் ரோவர் மிஷின் தனது கட்டுப்பாட்டில் உள்ள மலைச் சிகரங்களுக்கு கொலம்பிய குன்றுகள் என்று பெயரிட்டதுடன் ஒவ்வொரு சிகரத்திற்கும் மறைந்த விண்வெளி வீரர்களின் பெயரை சூட்டியுள்ளது. அதில் கல்பனா சாவ்லா பெயரிலும் ஒரு குன்று உள்ளது.
ஜூலை 19 2001 இல் கண்டுபிடிக்கப்பட்ட 518 26 என்னும் எண்னை கொண்ட சிறுகோள் ஒன்றுக்கு கல்பனா சாவ்லாவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. நாவலாசிரியர் பீட்டர் டேவிட் அவரது ஸ்டார் டெக் தி நெக்ஸ்ட் ஜெனரேஷன் பிபோர் டினோசர் என்னும் ஒரு கதாபாத்திரத்திற்கு சாவ்லா என்று பெயரை வைத்ததுடன் அந்த கதாபாத்திரத்தின் பெயரான சாவ்லாவை அந்த புதினத்தில் வரும் வின்கலத்திற்கும் வைத்துள்ளார்.
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி காரக்பூரில் கல்பனா சாவ்லா பெயரில் ஸ்பேஸ் டெக்னாலஜி மையத்தை அமைத்துள்ளது. குருஷேத்திரத்தில் உள்ள ஜியோ ஜிஸ்டர் எனுமிடத்தில் கட்டியுள்ள கோளரங்கத்தில் அரியானா மாநில அரசு கல்பனா சாவ்லா கோளரங்கம் என்று பெயரிட்டுள்ளது. ஒரு விண்வெளி பொறியாளராக வாழ்ந்துக் காட்டிய கல்பனா சாவ்லா தனது 41-வது வயதில் 2003 ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி என்றும் ஜொலிக்கும் நட்சத்திரமாய் விண்ணுலகில் மறைந்தார்.