புதிய கால்வாய் அமைத்து வரும் பணியை அதிகாரி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையினால் குமரகிரி ஏரியில் இருந்து வெளியேறிய உபரிநீர் மற்றும் பச்சப்பட்டி, வெள்ளகுட்டை கால்வாய் வழியாக வரும் மழைநீர் சாலைகளில் தேங்கி காணப்பட்டது. இதனை ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டு பச்சப்பட்டி பகுதியில் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டார். இதற்குரிய பணிகள் தொடங்கப்பட்டு மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் இந்த பணிகளை விரைவாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட சேலத்தாம்பட்டி ஏரிக்கு மழைக்காலங்களில் அதிக அளவு நீர்வரத்து வருகின்றது.
எனவே ஏரிக்கு வரும் தண்ணீரை வெளியேற்றுவதற்கு தேவையான கால்வாய் வசதி இல்லாததால் தண்ணீர் சிவதாபுரம் குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் சேலத்தாம்பட்டி ஏரிக்கு வருகின்ற மழைநீரை வெளியேற்றுவதற்கு காட்டூர் ரயில்வே லைன், ஆண்டிப்பட்டி, இந்திரா நகர் வழியாக செஞ்சி கோட்டையில் உள்ள ஓடையில் கலந்து திருமணிமுத்தாற்றில் செல்லும் வகையில் கால்வாய் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நிலம் சமன்படுத்தும் பணி நடைபெற்று அதனை ஆணையாளர் கிறிஸ்துராஜ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதனிடையில் பெய்த கன மழையினால் நாராயண நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. அதன்பின் ஆணையாளர் கிறிஸ்துராஜ் காளிதாசர் தெரு, சிவதாபுரம், சித்தர்கோவில், எம்.ஜி.ஆர்.நகர், கிச்சிபாளையம், போன்ற பல்வேறு பகுதிகளுக்கு கொட்டும் மழையில் நனைந்தபடி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து கால்வாய் தூர்வாருதல், சாக்கடை அடைப்புகளை சீரமைத்தல் மற்றும் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்தி பணிகளை விரைந்து முடிப்பதற்கு அலுவலர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார். அதன்பின் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் புகுந்த மழைநீரை வெளியேற்றி அப்பகுதி மக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்கு ஆணையாளர் கிறிஸ்துராஜ் அலுவலர்களுக்கு அறிவுரை கொடுத்துள்ளார். மேலும் பொக்லைன் எந்திரம் மூலமாக முனியப்பன் கோவிலின் அருகே தேங்கி நின்ற மழைநீர் அப்புறப்படுத்தப்பட்டது. ஆகவே மாநகராட்சியில் இருக்கின்ற அனைத்துப் பிரிவு அலுவலர்களும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று ஆணையாளர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.