நடிகர் கமல்ஹாசன் என்ன வேண்டுமானாலும் பேச அவர் என்ன ஜனாதிபதியா இல்லை கவர்னரா என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
நடைபெற இருக்கும் 4 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. 4 தொகுதிகளில் ஒன்றான அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக கமல் பிரசாரம் செய்த போது , சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கூறியது பெரும் சர்சையை ஏற்படுத்தியது. பிஜேபி , அதிமுக உள்ளிட்ட தலைவர்கள் கமலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இதில் அதிமுக_வின் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கமலின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து ஒருநாள் கமலின் நாக்கு அறுக்கப்படுமென்று கூறினார். அமைச்சரின் இந்த பேச்சு அவரின் பதவி பிரமானத்திற்கு எதிரானது எனவே அவர் பதவி விலக வேண்டுமென்று மக்கள் நீதி மய்யம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
இது குறித்து இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில் , நடிகர் கமல்ஹாசனின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை விசாரிக்க வேண்டும். கமல் தீவிரவாதத்தை தூண்டி விடும் வகையில் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.அவர் பேசியதற்கு மன்னிப்பு கேட்ட்டால் என்னுடைய கருத்தை நான் திரும்ப பெறுகிறேன். கமல்ஹாசன் என்ன வேண்டுமானாலும் சொல்வற்கு அவர் என்ன ஜனாதிபதியா இல்லை கவர்னரா..? என்று அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.