தமிழகத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என கமலஹாசன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.மேலும், 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை கைப்பற்றுவதே எங்கள் கட்சியின் நோக்கம் எனவும் கமல் கூறியுள்ளார்.
இது தொடர்பாக கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில்., தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் மக்களின் முழுமையான தேர்வாக இருக்காது என்ற உண்மை எல்லாரும் அறிந்த ஒன்றே. நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மையம் போட்டியிடுவதால் சொற்பமான முன்னேற்றமே கிடைக்கும். மாற்றத்தை இலக்காக கொண்டுள்ள மக்கள் நீதி மையம் அதனை தவணை முறையில் சிறிது சிறிதாக பெறுவதில் எந்த விதமான சாதனையும் இல்லை. மக்கள் நீதி மையத்தின் வெற்றிக்கான விதை சாதுர்யமோ அல்லது செல்வாக்கோ அல்ல, நேர்மையும் மக்களின் பலமுமே.
அடுத்து வரும் 50 வாரங்களில் மக்களுடைய நலன் பேணி நல்ல பணிகளை செய்வோம். நாளை பறக்கப் போகின்ற நமது வெற்றிக்கொடியே தமிழ்நாட்டின் அன்னக் கொடியாகவும் அமையும் என்பதை மக்கள் உணறும்படி செய்வோம். இதை மக்கள் நம்பவும் செய்வோம். 2021-ல் நடைபெறும் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றுவதே நம் இலட்சியமாக இருந்தால் வெற்றி நிச்சயம் என கூறியுள்ளார்.