Categories
உலக செய்திகள்

“கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு” ஷி ஜின்பிங்கின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா….? எதிர்பார்ப்பில் சீனா….!!

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் அதிபர் ஷி ஜின்பிங்கின் பதவிக்காலம் 3-வது முறையாக நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த வாரம் நடைபெற உள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் இதுவரை இல்லாத வகையில் அதிபர் ஷி ஜின்பிங்கின் பதவிக்காலம் 3-வது முறையாக நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பி.டி.ஐ. செய்தி நிறுவனம் கூறியதாவது “65 வயதாகும் ஷி ஜின்பிங் சீன கம்யூனிஸ்ட் கட்சி, மத்திய ராணுவ ஆணையம் ஆகியவற்றின் தலைமை மற்றும் முப்படைகளைக் கட்டுப்படுத்தும் அதிபர் பொறுப்பை வகித்து வருகின்றார்.

இதன் மூலமாக நாட்டின் 3 அதிகார பீடங்களும் அவரது கட்டுப்பாட்டில் இருக்கின்றது. இந்நிலையில் வரும் திங்கள்கிழமையன்று தொடங்க உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் ஷி ஜின்பிங் பங்கேற்க இருக்கின்றார். அந்த மாநாட்டில் கட்சி அண்மைக்காலமாக ஆற்றியுள்ள வரலாற்றுச் சாதனைகளைப் பட்டியலிட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக அரசுக்கு சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு வருகின்ற 11-ம் தேதி வரையிலும் நடைபெற இருக்கும் நிலையில் ஷி ஜின்பிங்கின் பதவிக்காலமானது 3-வது முறையாக நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஆகவே மாவோ சேதுங்குக்குப் பிறகு சீனாவின் மிக சக்தி வாய்ந்த தலைவராகக் கருதப்படும் ஜின்பிங் 3-வது முறையாக மேலும் 5 ஆண்டுகளுக்கு அதிபர் பதவியில் நீடித்தால் வரலாற்றில் அதுவே முதல் முறையாகும். சீனாவில் இதற்கு முந்தைய அதிபர்கள் அனைவரும் 2 முறை ஆட்சி செலுத்தியதற்குப் பிறகு (அ) தங்களுக்கு 68 வயது பூர்த்தியான பின் பதவியிலிருந்து ராஜிநாமா செய்து வந்தனர்.

இந்தச் சூழலில் கடந்த 2018-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அரசியல் சாசனத் திருத்தத்தில் ஒருவர் இருமுறை மட்டுமே அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முடியும் என்ற வரம்பு நீக்கப்பட்டது. இது ஷி ஜின்பிங்கின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்குரிய முன் ஏற்பாடாக கருதப்பட்டது. இந்த நிலையில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு அடுத்த வாரம் கூடுகிறது என்று பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |