காதலனுடன் ஓடிய மாணவியை தேடி வந்த அவரது குடும்பத்தினர் தற்கொலை மிரட்டல் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தி.நகர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஓசூரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். அவருக்கு தற்போது தான் 18 வயது பூர்த்தி அடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் வீட்டில் இருந்த மாணவி திடீரென காணாமல் போய் விட்டார். இதனால் அவரது உறவினர்கள் மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. எனவே உறவினர்கள் தி.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து மாணவியின் குடும்பத்தினர் நடத்திய விசாரணையில் குமரிமாவட்டத்தில் உள்ள கருங்கல் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் மாணவி பழகி வந்தது தெரியவந்தது. எனவே மாணவியை வாலிபர் கூப்பிட்டு சென்றதாக அறிந்து, உறவினர்கள் கருங்கல் பகுதிக்கு வந்து அவரது வீட்டுக்கு சென்று விசாரித்துள்ளனர்.
ஆனால் வாலிபரும், மாணவியும் அங்கு வரவில்லை என்றும் அவர் கூலி வேலை பார்த்து வருவது உறவினர்களுக்கு தெரியவந்தது. அவர் வீட்டுக்கு சென்று பல மாதங்கள் ஆவதும் உறவினர்களுக்கு தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து கருங்கல் காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர். அந்த புகாரின்படி வாலிபரையும் மாணவியையும் தேடி கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீங்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்றும் காவல்துறையினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் மாணவியை உடனடியாக கண்டுபிடித்து தரவேண்டும் என்று கூறி உறவினர்கள் காவல் நிலையத்தில் காத்திருந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகம் அல்லது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்து சென்றனர்.
இதனால் கலெக்டர் அலுவலகம் அல்லது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையிலும், கலெக்டர் அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஆனால் தற்கொலை மிரட்டல் கொடுத்தவர்கள் யாரும் அங்கு வரவில்லை. ஆகவே பலத்த போலீஸ் பாதுகாப்பு இருந்ததால் கலெக்டர் அலுவலகமும், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகமும் பரபரப்பாக காணப்பட்டது.