இளம் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள நார்த்தம்பட்டி சென்னம்பட்டி கிராமத்தில் கட்டிட தொழிலாளியாக ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் தேன்மொழி பாளையம்புதூரில் உள்ள தனியார் மில்லில் பணி செய்து வருகிறார். கடந்த 24-ஆம் தேதியன்று பணிக்கு சென்ற தேன்மொழி பின் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் ரவி பல்வேறு இடங்களில் தேன்மொழியை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ரவி கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன தேன்மொழியை வலைவீசி தேடி வந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் தேன்மொழியின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
அதன்பின் தேன்மொழியின் செல்போன் டவர் சிக்னல் முத்தம்பட்டி காட்டுப்பகுதியை காட்டியது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனால் காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தபோது முகம் சிதைந்த நிலையில் தேன்மொழி சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடல் அருகில் மாத்திரை மற்றும் தின்பண்டங்கள் இருந்தது. இதனைதொடர்ந்து தேன்மொழியின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் தேன்மொழிக்கும், ஊத்துப்பள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி பேசி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இந்நிலையில் கடைசியாக தேன்மொழி அந்த பெண்ணின் வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்றுள்ளார். அந்த வண்டியை காவல்துறையினர் தற்போது கைப்பற்றியுள்ளனர். மேலும் தேன்மொழி கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா அல்லது கள்ளக்காதல் விவகாரத்தில் சம்பவம் நடந்திருக்குமா என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆகவே பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகுதான் தேன்மொழி இறந்ததற்கான விவரம் குறித்து தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.