இந்தியாவில் தென்னிந்திய பகுதிகளில் நாளை பருவமழை தொடங்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. அதனை தொடர்ந்து டெல்டா மாவட்டம் மற்றும் தமிழக மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தான் அதிக மழைப் பொழிவு கிடைக்கும் என்பதால் ஏரி, குளங்கள் மற்றும் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. இதையடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் உள்ள ஒவ்வொரு மண்டலத்திலும் சிறப்பு அதிகாரிகளை நியமித்து கால்வாய்களை தூர்வாரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்கள் அந்தந்த மாவட்டங்களில் மழை காலங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய முன்னேற்பாடுகள் பற்றி மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் வருகின்ற 26 தேதி தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி வாயிலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, வருவாய் பேரிடர் துறை முதன்மைச் செயலாளர், அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் உயரதிகாரிகள் போன்ற பல்துறை அதிகாரிகள் கலந்து கொள்வார்கள்.
இந்தக் கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை வருகின்ற ஜனவரி மாதம் முதல் வாரம் வரை தொடரும் என்பதால் அதன் முன்னேற்பாடுகள் நடவடிக்கை பற்றி ஆலோசிக்க பட உள்ளது. மேலும் இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது பற்றியும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.