தேங்கி நிற்கின்ற மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி பகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கச்சேரி ரோட்டில் இருக்கும் காமராஜபுரம் பகுதியில் மழைநீர் வடியாமல் குளம் போல் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் தேங்கும் மழைநீர் கழிவுநீருடன் சேர்ந்து அருகிலிருக்கும் குடியிருப்புகளில் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை அடுத்து உதயேந்திரம் செல்லும் சாலையில் இருக்கும் எம்.ஜி.ஆர் சிலை முன்பாக காமராஜபுரம் பகுதி பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அவர்கள் கால்வாய்களை துறந்து விட வேண்டும் எனவும், மழை நீர் வடிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் துணை காவல்துறை சூப்பிரண்டு பழனி செல்வம் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து கால்வாய்கள் தூர்வாரப்பட்டு மழை நீர் வடிய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். மேலும் அவர்கள் உறுதியளித்த காரணத்தினால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.