தொடர் கனமழை காரணத்தினால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணத்தினால் பரவலாக மழை பெய்துள்ளது. இந்நிலையில் இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் விட்டு விட்டு கனமழை பெய்ததில் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இதனை அடுத்து கல்ராயன்மலை அடிவாரப் பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்த காரணத்தினால் முஸ்குந்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது.
இதனால் சாத்தனூர் அணையில் இருந்து கடந்த வாரம் பாசனத்துக்காக இடது, வலது என இரு புற கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டு இருக்கிறது. பின்னர் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஓடைகள் மற்றும் கால்வாய்கள் நிரம்பி வழிகின்றது. இதனைத் தொடர்ந்து கரையோரம் இருக்கும் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததில் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
இதில் கிராம மக்கள் சிலர் பாத்திரங்களைக் கொண்டு வீட்டில் புகுந்த தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர். அதற்குப் பிறகு புதூர் கூட்டு சாலையில் இருந்து சேராப்பட்டு செல்லும் வழியில் தண்ணீர் வழிந்து ஓடுவதால் சாலைகள் சேதமடைந்து இருக்கிறது. மேலும் கனமழை காரணத்தினால் பூத்தூர் பகுதிகளில் இருக்கும் விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்ததால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.