மலையோர பகுதியில் பெய்த கனமழையால் குற்றியார் தரைப்பாலம் உடைந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மேலும் பேச்சிப்பாறை அருகில் மலையோர பகுதியில் பெய்த கனமழையால் கோதையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அப்பகுதியில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனையடுத்து தண்ணீர சிறிது வற்றியதும் அந்த இடத்தை பார்த்த போது பாலத்தின் ஒரு பகுதி சுமார் 10 அடி நீளத்திற்கு உடைத்து அடித்து செல்லப்பட்டிருந்தது. இது குறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சப்-கலெக்டர் சங்கரலிங்கம், நெடுஞ்சாலைத்துறை என்ஜினியர் பாஸ்கர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். இதனையடுத்து அதிகாரிகள் சப்பாத்து பாலத்தின் மடையில் தங்கி நிற்கும் செடி கொடிகள் கற்களை அகற்றி தண்ணீர் செல்வதற்கு வசதி ஏற்படுத்தவும், உடைந்து போன பகுதியில் தற்காலிகமாக கற்கள் போட்டு பாதை அமைத்து போக்குவரத்தை சரி செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.