டெல்லியில் பெய்த கனமழையால் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் ஒரு பகுதி மேற்கூரை இடிந்து விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நாட்டின் தலைநகரான டெல்லியில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.நேற்று முன்தினம் பெய்த கனமழையால் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் ஒரு பகுதி மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. அச்சமயத்தில் அந்தப் பகுதியில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. அதன் பின்னர் மேற்கூரையை சரி செய்யும் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. அதே சமயத்தில் கழிவறையும் சேதம் அடைந்திருப்பதால் அதனையும் சீரமைக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் பொதுப்பணித்துறை அலுவலர்கள் இந்த கட்டிடம் பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் வெளியிடும் அறிக்கையை பொருத்தே கட்டிடம் புதுப்பித்தல் பணிகள் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. டெல்லியில் ஃபிளாக்ஸ்டாப் சாலையில் இருக்கின்ற முதலமைச்சர் வசித்து வருகின்ற வீடு கடந்த 1942 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. வெளியான தகவலின் படி, வீடு கட்டப்பட்ட ஆண்டு முதல் தற்போது வரை அந்த வீட்டில் தற்காலிக பழுதுபார்ப்பு பணிகள் மட்டுமே செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.