மும்பை கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் மூன்று குழந்தைகள் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் கனமழை காரணமாக நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. கால்வாய் ஓரம் இருந்த வீடு இடிந்து விழுந்ததில் தாய் மற்றும் மூன்று குழந்தைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். மும்பையில் பருவமழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல் மும்பையில் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்த மழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. அதே சமயத்தில் பலத்த காற்று வீசிய நிலையில் நேற்று காலை கடல் அலை சீற்றம் அதிகரித்தது. ராட்சச அலைகள் 4 மீட்டர் உயரத்துக்கு எழும்பி வந்து கரையை தாக்கியுள்ளனர்.
அதனால் மழைநீர் கடலுக்குச் செல்ல முடியாமல் போய்விட்டது. கொட்டி தீர்த்த கன மழை மற்றும் அலை சீற்றத்தால் நேற்று மாலை மும்பை முழுவதும் வெள்ளக்காடாக மாறிவிட்டது. சாலைகள் அனைத்தும் ஆறுகளாக மாறிவிட்டன. தண்டவாளத்தில் வெள்ள நீர் புகுந்ததால் மின்சார ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. சாலை போக்குவரத்து முழுவதுமாக முடங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் மருத்துவ பணியாளர்கள் மருத்துவமனைக்கு வந்து சேர இயலாமல் தவித்துள்ளனர். அத்தியாவசியமற்ற பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக மும்பை மக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதுமாக முடங்கியுள்ளது. சாந்தாகுருசில் இருக்கின்ற தோபிகாட் பகுதியில் சாக்கடை கால்வாய் ஓரம் கட்டப்பட்டு இருந்த மாடி வீடு ஒன்று காலை இடிந்து விழுந்துள்ளது. அதனால் அந்த வீட்டில் வசித்துவந்த முப்பத்தைந்து வயது பெண் மற்றும் அவரது 3 குழந்தைகளும் கால்வாய் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்கள். இதனைத் தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் 2 வயது பெண் குழந்தையை பிணமாக மீட்டுள்ளனர்.
அதே சமயத்தில் தாய் மற்றும் மற்ற 2 குழந்தைகளையும் மீட்க இயலவில்லை. அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் மும்பையை அடுத்துள்ள தானே, பால்கர் மாவட்டத்திலும் பலத்த மழை பெய்துள்ளது. அப்பகுதியில் மின்கம்பத்தை தொட்ட நபர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இத்தகைய நிலையில் மும்பையில் இன்றும் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.