மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சென்னை ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் சதாம்உசேன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கும் சமீனாநாத் என்ற பெண்ணுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன்- மனைவி இருவரும் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை திருவிடந்தையில் உள்ள மசூதிக்கு சென்றுள்ளனர். அங்கு தொழுகை முடித்துவிட்டு மாமல்லபுரம் நோக்கி வருவதற்காக மோட்டார் சைக்கிளில் வலது புறமாக இ.சி.ஆர். சாலையை கடக்க முயற்சி செய்துள்ளனர்.
அப்போது அவ்வழியாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் கணவன்-மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டு சமீனாநாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த சதாம் உசேனை காவல்துறையினர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த விபத்து குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், சப்-இன்ஸ்பெக்டர் குப்புசாமி ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.