எட்டு மாத கர்ப்பிணியும் அவரது கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள கணக்கம்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் பாலமுருகன். கரூரை பூர்விகமாக கொண்ட பாலமுருகன் திருப்பூர் பனியன் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.இவருக்கும் ஈரோடுமாவட்டத்தில் உள்ள பெருந்துறை பகுதியை சேர்ந்த கவிதா என்பவருக்கும் இரண்டரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கவிதா எட்டு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். மேலும் பாலமுருகனின் சகோதரர் கார்த்திகேயன் தனது மனைவியுடன் பாலமுருகனின் வீட்டிற்கு அருகில் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு கார்த்திகேயன் பாலமுருகனுக்கு போன் செய்துள்ளார். நீண்ட நேரமாகியும் பாலமுருகன் போனை எடுக்காததால் சந்தேகமடைந்த கார்த்திகேயன் அவரது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்ததால் சந்தேகமடைந்த கார்த்திகேயன் சிறிது அழுத்தம் கொடுத்து கதவை திறந்துள்ளார் . உள்ளே சென்று பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் பாலமுருகனும் கவிதாவும் சடலமாக கிடந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கார்த்திகேயன் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த நிலையில் இருந்த கணவன் மனைவி இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் தூக்கிட்ட அறையில் இருந்த கடிதத்தையும் காவல்துறையினர் கைப்பற்றினர். அக்கடிதத்தில் தங்களுடைய சாவுக்கு யாரும் காரணமில்லை என்று அவர்கள் எழுதியிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் கவிதாவின் தந்தை சண்முகம் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.