கந்துவட்டி கொடுமை கணவன் மனைவியின் உயிரை காவு வாங்கி குழந்தைகள் அனாதைகளாகிய சம்பவம் திருச்செங்கோட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் கைலாசம்பாளையத்தில் விசைத்தறி தொழில் செய்து வந்தவர்கள் சுப்பிரமணியம், மேனகா தம்பதியினர் இவர்களுக்கு பூஜாஸ்ரீ மற்றும் நவீன் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். தொழிலுக்காக சிலரிடம் சுப்பிரமணியம் கந்து வட்டிக்கு பணம் வாங்கி உள்ளார். ஆனால் வட்டி எகிறி கொண்டு செல்லவே பணத்தை திருப்பி செலுத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே கொரோனா ஊரடங்கு வரவும் தொழிலும் முடங்கிப் போயிருக்கிறது.
இதனால் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்த சுப்பிரமணியத்திடம் கடனை திருப்பி கேட்டு கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர். கடனைக் கேட்டு சுப்பிரமணியன் வீட்டிற்கு வந்தவர்கள் மேனகாவிடம் குடிபோதையில் அவதூறாக பேசியுள்ளனர் நடந்த சம்பவங்களை எல்லாம் பார்த்த இவர்களின் பிள்ளைகள் கடன் கொடுத்த பணத்தை கேட்டு வந்தவர்களின் காலில் விழுந்து கெஞ்சி உள்ளனர். இருந்தபோதிலும் மனம் இரங்காத அவர்கள் தொடர்ந்து மேனகாவை தரக்குறைவாக பேசியதால் குடும்பமே மனம் உடைந்தது.
வேதனையின் உச்சத்தை அடைந்த அவர்கள் பாலில் அரளி விதையை அரைத்து குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு தாங்களும் குடித்தனர். கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் நவீன் மற்றும் பூஜாஸ்ரீ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வாங்கிய கடனை கட்ட இயலாத சூழலில் கடன் கொடுத்தவர்கள் தரக்குறைவாக பேசியதால் இந்த முடிவுக்கு தள்ளப்பட்டதாக தற்கொலை செய்யும் முன் மேனகா கடிதம் எழுதிவைத்துள்ளார். தம்பதியின் உயிரைப் பறித்து குழந்தைகளை அனாதை ஆக்கிய கந்துவட்டிக்காரர்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.