கள்ளக்காதலால் கணவரை கொன்ற வழக்கில் ஜாமீனில் இருந்து வெளியே வந்த பெண்ணை சகோதரர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரி பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமித்ரா என்ற மனைவி உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமித்ரா அதே பகுதியில் வசிக்கும் கள்ளக் காதலன் சுந்தருடன் சேர்ந்து கணவர் முத்துக்குமாரை கொலை செய்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த நாங்குநேரி காவல்துறையினர் சுமித்ரா, சுந்தர் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது 2 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்நிலையில் சுமித்ரா நாங்குநேரியில் வசித்து வரும் தனது தாயுடன் இருந்த குழந்தைகளை பார்ப்பதற்காக வந்துள்ளார். இதனையறிந்த அவரது தம்பியான செல்வராஜ் என்பவர் குடும்பத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்திய காரணத்தால் சுமித்ரா இங்கு வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சுமித்ரா வீட்டிற்கு வெளியே முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த செல்வராஜ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுமித்ராவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் கால், கைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமித்ராவிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து செல்வராஜ் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக சுமித்ராவை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த நாங்குநேரி காவல்துறையினர் தப்பி ஓடிய செல்வராஜை வலைவீசி தேடி வருகின்றனர்.