தனது கணவரை மீட்டுத்தர வேண்டும் என இளம்பெண் குழந்தைகளுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்துள்ளார்.
சேலம் மாவட்டத்திலுள்ள சின்னகவுண்டாபுரம் பகுதியில் மணிமேகலை என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மணிமேகலை, குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற மணிமேகலை போலீஸ் சூப்பிரண்ட் ஸ்ரீ அபினவ் என்பவரை சந்தித்து அவரிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனக்கும் டைலரான தமிழரசன் என்பவருக்கும் இடையே திருமணம் நடைபெற்று தற்போது 3 பெண் குழந்தைகள் இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். கடந்த மாதம் தனது கணவர் வேலைக்கு சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மணிமேகலை உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து தமிழரசனின் உறவினர்களிடத்தில் மணிமேகலை விசாரித்தபோது அவருக்கு, திருமணமான வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் தமிழரசன் தன்னையும், தனது குழந்தைகளையும் தவிக்க விட்டு அந்த பெண்ணுடன் சென்றுவிட்டார் என்று தெரிவித்துள்ளார். இதனால் மணிமேகலை தனது குழந்தைகளுடன் சாப்பாட்டிற்கே வழி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றோம் என்று மிகுந்த வேதனையுடன் தெரிவித்து கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறி மனு ஒன்றை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுத்துள்ளார். அந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் என்பவர் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் மணிமேகலையின் கணவரான தமிழரசன் மற்றும் அந்தப் பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர்.