மோட்டார் சைக்கிளில் கணவருடன் வந்த பெண்ணிடம் நகை பறித்த 2 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள நம்பியூர் பகுதியில் மாரிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரதிதேவி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் தனியார் பனியன் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இதனையடுத்து அவர்கள் பெருமாநல்லூர் சாலையில் வந்து கொண்டிருந்தபோது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென ரதிதேவி அணிந்திருந்த 1 1\2 பவுன் நகையை மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த ஒருவர் பறித்துள்ளார்.
அதன் பின் கணவன்-மனைவி இருவரையும் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் கீழே தள்ளி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதில் கணவன்-மனைவி இருவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர். இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் 2 பேரையும் உடனடியாக மீட்டு நம்பியூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து மாரிசாமி குன்னத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.