சென்னையில் கணவன்,மனைவி இடையே ஏற்பட்ட சண்டையில் மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, யமுனா நகரை சேர்ந்தவர்கள் பரந்தாமன் (25), ஜெயந்தி (22) தம்பதியினர்.இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.அவர்களுக்கு இரண்டு வயது உடைய காவியா என்னும் பெண் குழந்தை உள்ளார். நேற்று முன்தினம் இரவு கணவன்,மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின் அவர்கள் உறங்க சென்று விட்டனர். அதிகாலை விடிந்து பரந்தாமன் கண்விழித்து பார்த்த போது ஜெயந்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் ஜெயந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை செய்தனர். விசாரணையில் பணப்பிரச்சனை காரணமாக கணவன் மனைவியிடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. அதனால் மனமுடைந்த ஜெயந்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருமணமாகி மூன்று ஆண்டுகளில் 2 வயது பெண் குழந்தையை தனியாக தவிக்க விட்டு தாய் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.