லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள எண்கண் கீழ காலனி பகுதியில் அழகுசுந்தரம்-சரண்யா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி ஆறு மாதங்கள் மட்டுமே ஆகின்றன. இதில் அழகுசுந்தரம் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன்- மனைவி இருவரும் வண்டாம்பாளை கிராமத்தில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். ஆனால் தற்போது ஊரடங்கு காலம் என்பதனால் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் கணவன் மனைவி இருவரும் மணக்கால் வழியாக குறுக்கு வழியில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
அப்போது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் அழகுசுந்தரம்-சரண்யா இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து அருகில் இருப்பவர்கள் மற்றும் காவல்துறையினர் கணவன் மனைவி இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கணவர் அழகுசுந்தரம் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அவருடைய மனைவி சரண்யா மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதுகுறித்து தகவலறிந்த நன்னிலம் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு சீனிவாசன் மற்றும் நெடுஞ்சாலைத் துறையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரியை விரட்டி சென்று லாரி டிரைவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் லாரி டிரைவரான அவர் திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள அம்மலூர் தெற்கு தெருவில் வசித்து வரும் சுரேஷ் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் சுரேஷ் ஓட்டிவந்த லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரி டிரைவரான சுரேஷ் என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.