ட்விட்டர் தளத்தை ஒழித்துவிட்டு இந்தியாவிற்கு சொந்தமான சமூக வலைத்தளங்களை உருவாக்க வேண்டுமென கங்கனா ரனாவத் கூறியுள்ளார்
தமிழ் சினிமாவில் ஜெயம் ரவியுடன் இணைந்து தாம்தூம் படத்தில் நடித்த இந்தி நடிகை கங்கனா ரனாவத் சினிமாவிற்கு வந்த சிறிய காலத்திலேயே 3 தேசிய விருதுகளை பெற்றவர். இவரது சகோதரியான ரங்கோலி கங்கனாவின் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தள கணக்குகளை கவனித்து வருவதாகவும் உபயோகப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு குறிப்பிட்ட ஒரு மதத்தினரை பற்றி பதிவு ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் அந்த பதிவிற்கு சினிமா பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டர் நிறுவனத்திடம் புகார் அளித்தனர். அதனை தொடர்ந்து கங்கனா ரனாவத் டுவிட்டர் கணக்கை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.
இதுதொடர்பாக வீடியோ ஒன்றை கங்கனா ரனாவத் நேற்று வெளியிட்டார். அதில் அவர் கூறியிருந்ததாவது “மருத்துவரையும் காவல்துறையினரையும் தாக்கியவரைதான் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று என் சகோதரி கூறியிருந்தார். மற்றபடி எந்த ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைப் பற்றியும் கூறவில்லை.
இங்கு பிரதமர், உள்துறை மந்திரி போன்றவர்களை தீவிரவாதி என்று சொல்பவர்களின் ட்விட்டரை யாரும் எதுவும் செய்வதில்லை. உண்மையான தீவிரவாதிகளை தீவிரவாதிகள் எனக் கூறினால் நடவடிக்கை எடுக்கின்றது ட்விட்டர் நிறுவனம். இது போன்ற தளங்களை ஒழித்துவிட்டு அதற்கு சமமாக இந்தியாவைச் சேர்ந்த சமூக வலைத்தளத்தை உருவாக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்