காங்கிரஸ் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொக்கிரகுளம் காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பாக அக்கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுந்தரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. அதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும், புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று வள்ளியூரில் கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே ஜெயகுமார் தலைமையில் காங்கிஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாநில செயலாளர் ஜார்ஜ் ராபின்சன், முன்னாள் மாநில செயலாளர் ஜோதி, மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி அமுதா கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் சுரண்டை காந்தி பேருந்து நிலையம் முன்பு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார் எம்.எல்.ஏ. ஆலோசனையின் பேரில் நகர தலைவர் எஸ்.கே.டி ஜெயபால் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாநிலத் தலைவர் வள்ளிமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.