சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி ஆற்காடு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர்கள் ஆற்காடு பகுதியில் வசிக்கும் பார்த்திபன், தினேஷ் மற்றும் விஜயகுமார் என்பதும் அவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் அவர்கள் மூவரையும் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.