கஞ்சா விற்பனை செய்த 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தென்பாகம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிலோன் காலனி பகுதியில் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் சின்னமணிநகர் பகுதியில் வசிக்கும் ரதீஸ் என்பதும், மேலும் அவர் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் ரதீசை கைது செய்ததோடு அவரிடமிருந்த 50 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதேபோன்று மில்லர்புரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக வெங்கடேச பிரசாத் என்பவரையும், 3- வது மைல் பாலம் அருகில் கஞ்சா விற்பனை செய்ததாக இசக்கிகணேஷ் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.