சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மேலப்பாளையம், நெல்லை டவுன், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 5 நபர்கள் குட்கா போன்ற போதைப் பொருள்களை விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவர்களை 5 பேரையும் கைது செய்ததோடு அவர்கள் வைத்திருந்த 25 குட்கா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.