சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மொட்டைக் கோபுரம் கடற்கரை பகுதியில் தாளமுத்துநகர் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் 6 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் சிலுவைப்பட்டி பகுதியில் வசிக்கும் மரியான், செல்வபதி, விமல், ராஜா, ஷாஜஹான் மற்றும் ரமேஷ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
மேலும் அவர்கள் 3 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 6 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட மரியான் மீது ஏற்கனவே ஒரு கஞ்சா வழக்கும், செல்வபதி மீது 2 கஞ்சா வழக்குகளும், விமல் மீது ஒரு கஞ்சா வழக்கும், ஒரு கொலை வழக்கும், ராஜா மீது ஒரு கஞ்சா வழக்கும், ஒரு கொள்ளை வழக்கும் மற்றும் ஷாஜகான் மீது ஒரு கஞ்சா வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.