கர்நாடகத்தைப் பொருத்தவரை, கன்னடம் முதன்மை மொழியாகும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கடந்த 14ஆம் தேதி இந்தி தினம் கொண்டாடப்பட்டதையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டார். அதில், நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும். இந்தி மொழியால் மட்டுமே நாட்டையும் , நாட்டு மக்களையும் ஒன்றிணைக்க முடியும் என்று தெரிவித்தார். அமித்ஷாவின் இந்த கருத்துக்கு தமிழகம் மட்டுமில்லாமல் இந்தி பேசாத மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், நம் நாட்டில் அனைத்து அலுவல் மொழிகளும் சமம். இருப்பினும், கர்நாடகத்தைப் பொருத்தவரை, கன்னடம் முதன்மை மொழியாகும். அதன் முக்கியத்துவத்தை நாங்கள் ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம், கன்னடத்தையும் நமது மாநில கலாச்சாரத்தையும் மேம்படுத்துவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
All official languages in our country are equal. However, as far as Karnataka is concerned, #Kannada is the principal language. We will never compromise its importance and are committed to promote Kannada and our state's culture.
— CM of Karnataka (@CMofKarnataka) September 16, 2019