இருநாடுகளின் அதிபர்களும் விரைவில் காணொளி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா மற்றும் சீனா பொருளாதாரத்தில் மிகவும் உயர்ந்த வல்லரசு நாடுகளாகும். இந்த இரு நாடுகளும் சமீபகாலமாக மோதல் போக்கை கொண்டுள்ளதால் சுமூகமான உறவு காணப்படவில்லை. குறிப்பாக வர்த்தகப் போர், கொரோனா பாதிப்பு , சீனா தைவானுக்கு அனுப்பிய போர் விமானங்கள் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜேக் சல்லிவனும் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விவகாரக் குழுமதத்தின் உறுப்பினரான யாங் ஜீச்சியும் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜூரிச் நகரில் நேற்று முன்தினம் சந்தித்து உரையாடியுள்ளனர்.
அதில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் யாங் ஜீச்சியிடம் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பிரச்சினைக்காக இருதரப்பு நாடுகளும் தங்களது பங்களிப்பை தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் சீனாவின் நடவடிக்கையில் எழுந்த சந்தேகங்களை குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த சந்திப்பானது சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாக கூறப்படுகிறது. அதிலும் தைவான் விவகாரத்தில் அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சரான டோனி பிளிங்கனும் அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தில் உள்ள உயர் அதிகாரிகளும் சீனாவை கடுமையாக எச்சரித்துள்ள நிலையில் இந்த சந்திப்பானது நடைபெற்றுள்ளதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இது குறித்து சீனா வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் “இந்த சந்திப்பின் போது இருதரப்பு விரிவான, மனம் திறந்த மற்றும் ஆழமான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இரு நாடுகளின் உறவு, உலகளாவிய விவகாரங்கள், இருதரப்பு நாடுகளின் நலன் தொடர்பான பிராந்தியா விஷயங்கள் போன்றவை பற்றி பேசப்பட்டது. இது ஒரு ஆக்கபூர்வமான சந்திப்பாகும். மேலும் இரு நாடுகளுக்கும் இடையே புரிதல் ஆனது சிறப்பாக அமைவதற்கு பங்காற்ற வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து அமெரிக்காவின் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டதில் “இது மிகவும் முக்கியமான சந்திப்பாகும்.
இருதரப்பு நாடுகளுக்கு இடையேயான தகவல் தொடர்புகளை மேலும் பலப்படுத்துவது, தேவையற்ற விஷயங்களில் புரிதலின்மையை தவிர்த்து கொள்வது குறித்தும் முக்கியமாக ஆலோசனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அமெரிக்கா அதிபர் ஜோ பைடனும் சீனா அதிபர் ஜின் பிங்கும் இந்த ஆண்டின் இறுதிக்குள் காணொளி மூலமாக சந்தித்து பேசுவது குறித்து கொள்கை அளவில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. இந்த கொள்கை குறித்து இனிவரும் நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த செப்டம்பர் மாதம் இருநாட்டு அதிபர்களும் முதன்முறையாக தொலைபேசி வாயிலாக பேசினார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும்.