ரயில்வே நிலையத்திற்குள் முன்பதிவு இன்றி வந்த வாலிபர்களுக்கு விதித்த அபராத தொகையை அதிகாரிகள் ரத்து செய்ய மறுத்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள பழங்குடி பகுதியில் வசிக்கும் கபடி விளையாட்டு வீரர்கள் 10 பேர் சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஆத்தூரில் நடைபெற்ற மாநில அளவிலான கபடிப் போட்டியில் பங்கேற்றுள்ளனர். அதன்பின் போட்டியில் வெற்றி பெற்ற அவர்கள் வெற்றிக் கோப்பையுடன் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக சேலத்தில் இருந்து பேருந்தில் திருச்சிக்கு சென்றுள்ளனர். பின்னர் நெல்லை செல்வதற்காக திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
அப்போது அங்கிருந்த டிக்கெட் பரிசோதகர் அவர்களைத் தடுத்து நிறுத்தி டிக்கெட்டை கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் நாங்கள் டிக்கெட் எடுப்பதற்காக தான் உள்ளே வந்தோம் என கூறியுள்ளனர். ஆனால் பரிசோதகர் முன்பதிவு செய்தால் மட்டுமே ரயிலில் பயணிக்க முடியும் எனவும், ரயில் நிலையம் வர வேண்டுமென்றால் பிளாட்பார்ம் டிக்கெட் எடுத்திருக்க வேண்டும் என அவர்களிடம் கூறியுள்ளார்.
அதற்கு அவர்கள் எங்களுக்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்பது பற்றி தெரியாத காரணத்தினால் விளையாட்டு வீரர்கள் என்பதால் எங்களை மன்னித்து டிக்கெட் முன்பதிவு செய்து கொடுங்கள் என்று கெஞ்சி கேட்டுள்ளனர். இருப்பினும் டிக்கெட் பரிசோதகர் அதை பொருட்படுத்தாமல் அவர்களுக்கு 1,500 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். இந்த அபராதத்தை கட்டினால் மட்டுமே இங்கிருந்து செல்ல முடியும் என கூறியிருக்கிறார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த வீரர்கள் எங்களுக்கு சாப்பிடக் கூட பணம் கிடையாது ஊருக்கு செல்ல டிக்கெட் எடுக்க மட்டுமே பணம் வைத்துள்ளோம் என கூறி அங்கிருந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்நேரம் அங்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் இது பற்றி அறிந்து வீரர்களுக்கு உதவும் படி அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியுள்ளனர். ஆனாலும் அதிகாரிகள் அபராதத்தை ரத்து செய்ய மாட்டோம் என உறுதியாகத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர்கள் ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறி பேருந்தில் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.