ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிட கூடாது என்று காபூலில் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டார்கள். தற்போது அங்கு புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், நாட்டின் அதிபராக, தலிபான்கள் அமைப்பின் தற்போதைய தலைவராக இருக்கும் முல்லா அப்துல் கனி பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், நாட்டில் புதிய ஆட்சி அமைப்பது குறித்து தலீபான் குழுவிற்கும், ஹக்கானி வலைக்குழுவிற்கும் நடந்த பேச்சுவார்த்தையில் மோதல் ஏற்பட்டு முல்லா அப்துல் கனி பரதருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் பாகிஸ்தானின் உளவு அமைப்பின் தலைவரான பைஸ் ஹமீது, இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர காபூலுக்கு சென்றிருக்கிறார்.
மேலும், பாகிஸ்தான் அரசு, தலிபான்கள் அமைப்பிலுள்ள பாகிஸ்தானின் தீவிர ஆதரவாளர்களுக்கு உயர்ந்த பதவிகளை வழங்க முயற்சித்து வருகிறது. இதில் முல்லா கனி பரதர் மற்றும் ஆனஸ் ஹக்கானி இருவரும் பாகிஸ்தானின் ஆதரவாளர்கள். எனினும், ஹக்கானி பாகிஸ்தானின் தீவிர ஆதரவாளர்.
எனவே, பாகிஸ்தான் அரசு, இவரை அதிபராக்க வேண்டும் என்று முயல்கிறது. இதனை முல்லா கனி அமைப்பினர் விரும்பாததால் தான் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. எனவே, தலீபான்களுக்கு இடையிலேயே கடும் மோதல் நிலவுகிறது. இதனால், பாகிஸ்தான் நாட்டின் இந்த தலையீட்டை எதிர்த்து மக்கள் காபூலில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.