புளிய மரத்தில் கார் மோதிய விபத்தில் ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள எடப்பாளையம் கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு யாசினி என்ற மகள் இருக்கின்றார். இவரை சென்னையில் உள்ள கல்லூரியில் சேர்ப்பதற்காக ரவி காரில் புறப்பட்டார். அந்தக் காரை அண்டபள்ளத்தை சேர்ந்த குப்பன் மகன் அருள் என்பவர் ஓட்டிச் சென்றார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி- திண்டிவனம் சாலையில் உள்ள ராகவேந்திரா கோவில் அருகே வந்தபோது டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்து திடீரென கார் சாலையோர புளியமரத்தில் பயங்கரமாக மோதியது.
இதனால் ரவி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் யாஷினி, அருள் ஆகிய 2 பேரும் காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து ரோஷணை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.