முதுமலையில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் கரடிகுட்டி படுத்துக்கிடந்து வாகனங்களை வழிமறித்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் பகுதியில் இருந்து மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதில் முதுமலைக்கு அடுத்ததாக கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. அந்த வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவைகள் சில நேரங்களில் முதுமலை மைசூர் சாலையில் உலா வருவது வழக்கம். இந்நிலையில் மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கரடி குட்டி ஒன்று சில நாட்களுக்கு முன்பு வந்து சாலையின் நடுவில் படுத்து கிடந்தது. இதனைப் பார்த்த டிரைவர்கள் வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தினர்.
இதனைத்தொடர்ந்து கரடி அங்குமிங்கும் சாலையில் நடந்து சென்றது. இதனை அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள், வாகன டிரைவர்கள் ஆகியோர் செல்போனில் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து கரடிக்குட்டி காட்டிற்குள் சென்று விட்டது. இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுவதாவது, சாலையில் சுட்டி தனமாக படுத்து கிடந்த கரடி குட்டியை அங்கு வந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் கண்டு ரசித்தனர் என கூறினர்.