கனடாவில் லாட்டரி சீட்டுடன் சடலமாக கிடந்த நபரின் வழக்கு விசாரணையை காவல்துறையினர் மீண்டும் தொடங்கி உள்ளனர்.
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள ஹுரான் கவுண்டியின் கரையில் செப் 24-தேதி ஒரு ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தைச் சேர்ந்த கிரிகோரி ஜார்விஸ் என்று தெரியவந்தது. இதனையடுத்து பிரேத பரிசோதனையில் கிரிகோரி ஜார்விஸ் நீரில் மூழ்கி இறந்ததாக முடிவு செய்யப்பட்டது. இதனால் கிரிகோரி ஜார்விஸ் தனது படகில் செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்து தண்ணீரில் விழுந்து இறந்திருக்கலாம் என காவல்துறையினர் கருதினர்.
ஆனால் சமீபத்தில் கிரிகோரி ஜார்விஸ் சட்டை பாக்கெட்டில் ஒரு “தீ ஜாக்” என்ற லாட்டரி சீட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த லாட்டரி எண்ணிற்கு 45 ஆயிரம் டாலர் பரிசு விழுந்தது தற்போது தெரியவந்துள்ளது. எனவே கிரிகோரி ஜார்விஸ் இறப்பில் முன்னதாக முறைகேடு எதுவும் நடந்து இருப்பதாக காவல்துறையினர் சந்தேகப்படவில்லை. ஆனால் தற்போது லாட்டரி சீட்டு கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த வழக்கு விசாரணையை காவல்துறையினர் மீண்டும் தொடங்கியுள்ளனர். மேலும் லாட்டரியில் அவர் பெற்ற பரிசு தொகை இறந்தவரின் உறவினர்களுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.