சென்னையில் 16 வயது சிறுமி காதல் மோகத்தால் கர்ப்பமாகி பின்பு குழந்தையை குளியலறையில் பெற்றெடுத்த சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி அருகே மூன்று இளம் பெண்கள் பச்சிளம் குழந்தையுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருப்பதாக கீழ்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசனுக்கு தகவல் கிடைத்தது. அவர் உடனடியாக அந்த இடத்திற்குச் சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மிசோரத்தை சேர்ந்த 16 வயது சிறுமி வேலை தேடி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மகளிர் விடுதியில் தங்கியுள்ளார். அவர் காதல் வலையில் சிக்கி கர்ப்பம் அடைந்தார்.அவர் கர்ப்பம் அடைந்ததை வெளியில் சொல்லவில்லை. கடந்த வாரம் அச்சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டு குளியல் அறையிலேயே பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். யூடியுப் மூலம் தொப்புள் கொடியை அறுப்பதை பார்த்து அறுத்துள்ளார். அதன்பின் அந்தக் குழந்தையை கொன்று விடலாமா? கோவிலில் வைத்து விடலாமா? என்று யோசித்து உள்ளார்.
அவருக்குத் தெரிந்த சென்னை அயனாவரத்தில் உள்ள கல்லூரி மாணவியிடம் யோசனை கேட்டுள்ளார். அதற்கு அவர் குழந்தையை கொல்வது பாவம் என்று கூறி அவருக்குத் தெரிந்த மாணவியிடம் குழந்தையை அளித்தார். அம்மாணவி தன் பெற்றோருக்கு தெரியாமல் குழந்தையைத் தன் அறைக்குள் வைத்து பால் ஊற்றி ரகசியமாக வளர்த்து வந்தார். அதன்பின் அப்பெண்ணும் வீட்டிற்கு பயந்து வேறொரு பெண்ணிடம் குழந்தையை வளர்க்க சொல்லி கொடுக்க முயற்சி செய்தபோது போலீசாரிடம் சிக்கினர்.
போலீசார் அந்த 2 மாணவிகளிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் குழந்தையை கொல்லக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் உதவி செய்தோம் என்று கூறினார்கள்.இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் முருகேசன் குழந்தையை, குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தார். அதன்பின் குழந்தையை பெற்றெடுத்த சிறுமியை விசாரிக்கச் சென்றபோது அச்சிறுமி தலைமறைவாகி விட்டது தெரியவந்தது. மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.