கார் மீது மரம் முறிந்து விழுந்ததில் பெண்ணுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேர்வலாறு பகுதியில் மின்வாரிய ஊழியரான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் சேர்வலாறிலிருந்து அம்பைக்கு ஒரு காரில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தனர். அந்த காரை ஜெயப்பிரகாஷ் என்பவர் ஓட்டிச் சென்ருள்ளார். இந்நிலையில் அகஸ்தியர்பட்டி கல்சுண்டு காலனி பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது.
இதனையடுத்து முருகேசன் மற்றும் ஜெயக்குமார் இருவரும் காரை சாலையோரம் நிறுத்தி விட்டு இயற்கை உபாதை கழிப்பதற்காக கீழே இறங்கி சென்றுள்ளனர். இந்நிலையில் காரின் உள்ளே காளியம்மாள் மட்டும் இருந்தார். அப்போது சாலையோரம் நின்றிருந்த பழமையான மருதமரம் ஒன்று திடீரென முறிந்து காரின் மேல் விழுந்துள்ளது. இதனால் காளியம்மாள் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயபிரகாஷ் மற்றும் முருகேசன் ஆகியோர் ஓடி வந்து காரில் இருந்த காளியம்மாள் உடனடியாக மீட்டனர்.
இதில் காளியம்மாளுக்கு தோள்பட்டையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அருகிலுள்ளவர்கள் விக்ரமசிங்கபுரம் காவல் நிலையத்திற்கும், அம்பை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சாலையின் குறுக்கே விழுந்துள்ள மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.